Saturday, March 21, 2015

நம்மவர் தியாகம் கூறும்

நம்மவர் தியாகம் கூறும்
நம்மை நாமே ஆளும்
நாளென நாம் கொண் டாடும்
நம் கொடி ஏற்றத் தூவும்-மலர்
நம்மவர் தியாகம் கூறும்
காந்தியின் அகிம்சைப் போரும்
கனலெழு போஷ்படை வீறும்
ஏந்திய கொடியினில் தோன்றும்-நம்
இருதயம் துடித்தெழத் தூண்டும்
சத்தியாக் கிரஹமே வெல்லும்-அதை
சத்திய சோதனை சொல்லும்
ஒத்துழை யாமை இயக்கம்-அதை
உலகமே இன்றும் வியக்கும்
பலமிகு ஜான்சி வாளும்
படையுடன் நாச்சி யாரும்
திலகரும் படேலுடன் நேரும்
தியாகிகள் வரிசையைப் பாரும்
பாஞ்சையின் பொம்மனைப் பாரும்
பகத் சிங் உணர்த்திய தீரம்
வாஞ்சியை இயக்கிய மூலம்
வ உ சி பாரதி வீரம்
கொடியினில் கசிந்திடும் ஈரம்
கொடும் டயர் கொடுமையைக் கூறும்
கொடியினை முடியிலும் தாங்கும்
குமரனின் நினைவுகள் ஓங்கும்
முடியர சாண்டநம் நாடும்
குடியர சானதைப் பாரும்
குடியர சானநம் நாடும்
வல்லர சாய் இனி மாறும்
***************************************************************

சு.அய்யப்பன்

No comments:

Post a Comment