ஒன்றே அமிழ்தாம் ஒண்டமி ழென்போம்..... 1
ஒருதனிக் குணத்தாள் அகம்புறம் என்னும்
இருதிறம் காட்டும் இயல்பொன் றுடையாள் – 121
ஒருசொல் இருபொருள் உவந்தேயளிக்கும்
முத்தமிழாளே இரட்டுறமொழிதலாய்
ஒன்றுமற் றொன்றாய் ஒற்றுப்பெயர்ப்பாய்-12321
ஒருமாத்திரைகுறில் இருமாத்திரைநெடில்
வரும்முப் பொழுதும் தரும்எழுத்து அளப்பாய்
நாற்றிசை போற்றும் முந்நீர் ஏத்த
இருநிலம் வாழ்த்தும் இளையவள் ஒருத்திநீ – 1234321
ஒன்றுதொல் காப்பியம் உரைக்கும் இலக்கணம்
இரண்டுகாப்பியங்கள் இலக்கியங்கள்
முத்தொள் ளாயிரம் நாலடி யாரும்
ஐந்திணைகளோடும் நாற்கவி யருளி
முக்கடுகத்தால் இருபிணி அகற்றி
எக்காலும் காக்கும் எண்ணமொன் றுடையாள்_123454321
ஒருதிருக் குறளால் ஈரடி யிட்டு
முப்பால் பொழிந்தாய் நால்வகைப் பொருள்கொள
ஐவகை நிலங்களோ(டு) அறுபெரும் பொழுதளந்தாய் ஐவகை கருப்பொருள் நால்வகை உரைகளை முந்நூல் ஆக மொழிந்திட வைத்தே
இரண்டு படாமல் ஒன்று படுத்துவாய் – 12345654321
ஓரசை நேர்நாள் ஈரசை நிரைமலர் மூவசை காய்கனி நாலசை சீர்களோ(டு)
ஐந்திலக் கணத்தாள் ஆறிலக் கணம்பெற்றாள்
ஏழிசை இசைப்பாய் ஆறறி வளந்தாய்
ஐம்புலன் காப்பாய் நால்வகைப் பாக்கள்தா
அம்மா முச்சங்க அரசியே உன்னை
இருகைகள் வணங்க மனமொரு மித்தேனே – 1234567654321
ஒருதனிச் சிறப்பு
ழகரம் உடையாய்
இருகண்புகுவாள்
மூவினம் கொண்டாள் நால்வகைச் சொல்பெற்றாள்
ஐங்குறு நூறுடன் அறுபடை கொண்டாள்
எழுகூற் றிருக்கைபா
ஆறென் றமர்வாய்
அஞ்சுதந் திரம்கண்டாய் நாநாற் பதுதந்தாய்
முக்கனிச் சாறாய் இருமையும் இருப்பாய்
எக்காலும் தொழுவேன் இதயம் ஒன்றியே. I234567654321