Sunday, April 26, 2015

கற்குஞ்சங் கீத சபா

ஆடுஞ் சபையென்றே யாடுகிறாய் அப்பரே 
பாடுஞ் சபையென்றே பாடுங்கள் - பாடுங்கல் 
நிற்குந்தூண் ஆக்கித்தான் நெல்லையப்பர் நித்தமும் 
கற்குஞ்சங் கீத சபா. 


நெல்லை தாமிர சபைதானே, சங்கீத சபையா? 
எப்படி ?இப்படித்தான் 
நெல்லையப்பர் கோவிலின் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு சப்தம் வரும் 
அது ஆன்மீக வாதி தட்டினாலும் வரும் பகுத்தறிவு வாதி தட்டினாலும் வரும் 

இசைகருவிகள் கொண்டது தானா சங்கீத சபை... 
கற்குஞ்சபை அதாவது கல்லுக்குஞ் சபை கண்டார் நெல்லையப்பர்... 
கற்குஞ்சபை-படிக்குஞ்சபை என்றும்பொருள்கொள்க

Saturday, April 25, 2015

காக்கை சிவந்திருக்கும் காண்

மங்கை இளஞ்சிரிப்போ மாதுளம் பூஞ்சிரிப்போ 
செங்கை எதன்சிவப்போ செப்பென்றேன் தங்கையில் 
சேர்க்கும் மருதாணி பச்சையே யானாலும் 
காக்கை சிவந்திருக்கும் காண் 
******************************************* 
கால் கை சிவந்திருக்கும் காண்

ஏழைசொல் ஏற்கும் எழுத்து

முந்தி வரவேற்கும் முக்கனியி லொன்றுதரும் 
பந்தி விருந்து படைக்கவரும் - சந்ததியை 
வாழவைக்கும் அம்மாவும் வாழையு மொன்றென்ற 
ஏழைசொல் ஏற்கும் எழுத்து. 


முந்தி வரவேற்கும்-மாவிலை தோரணம், வாழைக்கன்று 
முக்கனியி லொன்றுதரும்-மா, வாழை 
பந்தி விருந்து படைக்கவரும்-வாழைஇலை, மாவடு ஊறுகாய் 

சந்ததியைவாழவைக்கும் அம்+மா(மாமரமும்)(கர்ப்பகாலத்தில் மாங்காய் சாப்பிடுதல் குழ்ந்தை இதயத்தினை பல்மாக்குமாம்), 
வாழையும் சந்ததியைவாழவைக்கும்

கந்தனும் கர்த்தரும் நேர்

மண்ணோர் பரமன் மகனென்று போற்றலால் 
விண்மீன் இவர்பிறப்பைக் காட்டலால் - மண்ணுலகில் 
முந்தைய வேதம் மலையில் மொழிந்ததினால் 
கந்தனும் கர்த்தரும் நேர். 

பரமன் மகனென்று-பரமசிவன் மகன், பரமபிதா மகன் 
விண்மீன் இவர்பிறப்பைக் காட்டலால்-கார்த்திக்கைநட்சத்திரம்,நட்சத்திரம் எழுந்ததது , 
மலையில் மொழிந்ததினால்-சுவாமி மலை யில் பிரணவம் சொன்னது , மலைபிரசங்கம் செய்தது

இல்லாமல் இல்லை

கண்டறியு முன்னாலே புவியீர்ப்பு விசையிங்கே 
இல்லாமல் இல்லை 
உண்டறியு முன்னாலே செங்கரும்பில் தித்திப்பும்
இல்லாமல் இல்லை 
பண்டறியு முன்னாலே கண்டங்கள் அண்டங்கள் 
இல்லாமல் இல்லை 
உண்டில்லை என்றாலும் ஒருதெய்வ மெந்நாளும் 
இல்லாமல் இல்லை…. 
பட்டுணரச் செய்கின்ற பகவானும் அனுபவமாய் 
இல்லாமல் இல்லை… 
தொட்டுணர முடியாத பகாவானும் பகவானும் 
இல்லாமல் இல்லை…

என்னை அகலா கலா

கலை என்று தொடங்கி கலா கலா என்று வெண்பா பாடென்று என் நண்பர் சொல்ல எழுதினேன்

கலையினை நாட கடைக்கணித்தாய் காலை
தலையினில் ஏந்தினேன் தாயே -கலையரசி
நின்னைச் சரணடந்தேன் நீஎந்தன் நாதங்கி
என்னை அகலா கலா.


இதில் இன்னுமொரு சிறப்பு உதடுகள் ஒட்டவோ குவியவோ செய்யாத எழுத்துக்களால் ஆனது.

தாய்மொழியாய் பெற்றேன் தமிழ்

குற்றால நாதருக்கு கூத்தாடிக் கால்வலியோ 
வற்றாக் குடிநீரை வைத்தனையே(ன்)!?- பெற்றகுழல் 
வாய்மொழியே உந்தனது வாயமுதம் தந்ததனால் 
தாய்மொழியாய் பெற்றேன் தமிழ்.

அசலபந்தம்

அசலபந்தம்
மதிப்பிற்குரிய சங்கரன் ஐயா 
அன்பு அமைக்கும் விசால பந்தம் 
அன்பன் அமைத்தேன் அசலபந்தம்... 
ஆம்.. 
சாரல் குற்றால மலைதானே 
அதனால் தான் கவின்சாரன் அவர்களுக்கு அசலபந்தம் 
வெண்பாவை அமைத்து அதனை அசலம் போல் எழுத 
முடிவில் ஈற்றடி சீர்கள் பெரும்பாலும் கீழ்நோக்கி வரப்பாடுவதாகும் 
மலையை இடம்வலமாக சுற்றுவதுபோல் மேல்நோக்கி ஏறி அடிகளின் பொருள்காண வேண்டும் 
அதற்கான வழியினை அம்புக்குறி மூலம் காட்டியுள்ளேன்.எண்கள் துவக்கத்திலும் முடிவிலுமிட்டுள்ளேன் 
இதுஒரு எளிய முயற்சி…. 
வெண்பா இதோ…. 

சித்திரமே நின்கவி சிந்தனை சொல்லவல்ல 
வித்தக னேகவி சேகர – முத்தே 
நவிலுக சாதனை நாவலன் நீயே 
கவியே கவின்சா ரலன்

போற்று பனையென்றே போற்று

மன்னன் விசிறி மயில்தோகை மாநிலந்
தன்னில் விசிறி தருக்களாம் - இன்னுங்கேள்
காற்றினை ஆட்டுவிக்கும் கைவிசிறி தந்ததெல்லாம்
போற்று பனையென்றே போற்று

விதியினைதுண் டாக்கும் விரைந்து

பன்னீர் இலைவிபூதி பார்த்தீரோ செந்தூரன் 
பன்னிரு கைகளதில் பார்த்திடலாம் -என்றும் 
கதியென்று நாம்பூசும் கந்தன் விபூதி 
விதியினைதுண் டாக்கும் விரைந்து 


விதியினை துண் டாக்கும் விரைந்து 

ஆம் பாருங்கள் விபூதி என்னும் எழுத்தினைப் பாருங்கள் வி தி யை இரண்டாகப் பிளந்துள்ளதே..வி (பூ) தி 
கதிர்வேல் சூரனை பிளந்ததுபோல் பிளந்துள்ளது. 

பன்னீர் இலைவிபூதி திருச்செந்தூரில் வழங்கப்படுகிறது. அந்த பன்னீர் இலையில் பன்னிரு நரம்புகள் காணப்படும் அவை முருகனின் பன்னிருகைகளாகவே கருதப்படுகிறது

சிந்தியல்

ஆல நிழலில் அரசமரும் ஆனாலும் 
ஆல இலைகூரை ஆகாதே ஓங்குபனை 
ஓலையும் வேய்ந்தாற் குடில்-1 

உணர்ந்த இலைகள் உலகில் சருகாம் 
உணர்ந்தும் சுவடி தரும்பனையின் ஓலை 
உணர்ந்து மதனை நினை.2 

(உணர்ந்தும்-உலர்ந்தும், எண்ணி உணர்ந்து)